இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் பதிவாகிய கொவிட் வைரஸ் தொற்றாளர்களில் 95.8 வீதமானோர் புதிய டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும்,வெவ்வேறு மாவட்டங்களில் 84 வீதத்தில் இருந்து 100 வீதத்தில் டெல்டா வைரஸ் பரவல் பதிவாகியுள்ளதாகவும், மரண எண்ணிக்கை அதிகரிக்க இதுவே பிரதான காரணம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் பணிப்பார் பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர ஆகியோரின் ஆய்வில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்ற டெல்டா வைரஸ் குறித்த ஆரம்ப கட்ட ஆய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில்,ஏப்ரல் மாதத்தின் பின்னர் குறிப்பாக டெல்டா வைரஸ் பரவல் கண்டறியப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வில் இது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.