இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக சில தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்துமாறு இலங்கை சுற்றுலா துறையினர் சுகாதார அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு விமானப் பணியாளர் தொழிற்சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சில தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்களை தளர்த்துமாறு இலங்கை சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகாரசபை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெனரலிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்ட விமான பணியாளர் கொவிட் பாதுகாப்பு உடைகளை அணிவதை தவிர்த்தல் மற்றும் நாட்டுக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் பி.சி.ஆர் சோதனைகளை செய்தல் உள்ளிட்ட விதிகளை தளர்த்துவது உள்ளிட்டவை அடங்கும்.
எனினும் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வது கொவிட் தொற்று பரவலிலிருந்து முழுமையாக பாதுகாப்பு அளிக்காது என விமானப் பணியாளர் தொழிற்சங்கம் சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரான கிமர்லி பெர்னாண்டோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
கொவிட் மாறுபாடுகள் குறிப்பாக, விமான பயணங்களின் ஊடாகவே பரவுவதாக சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கம், இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது, விமானப் பணியாளர்களினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபையானது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான தமது முயற்சியில் பொறுப்பற்றதாக இருக்கக் கூடாது எனவும் தொழிற்சங்கம் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.