January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்வேறு நோய் நிலைமைகள் உடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை!

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் 20 முதல் 25 வரையான சிறுவர்கள் தினந்தோறும் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 10 – 12 வரை குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை 200 இல் இருந்து 70 ஆக குறைவடைந்துள்ளதோடு, தீவிர சிகிச்சை பிரிவில் 4 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், முதலில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க பரிந்துரைப்பதாக வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 1,000 சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் 20 சிறுவர்கள் கொரோனாவால் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிறவியிலேயே உடல் நல குறைபாடு உள்ளவர்களும் இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் சுவாச நோய் உள்ளிட்ட நோய் நிலைமைகள் உடையவர்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இந்த திட்டமானது மாவட்டம், கிராம சேவையாளர் பிரிவு மற்றும் மருத்துவமனை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் வைத்தியர் நம்பிக்கை வெளியிட்டார்.