இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் செப்டம்பர் 14 ஆம் திகதியுடன் ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த வார காலப்பகுதியில் மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக வெளியான செய்திகளை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் 2019 டிசம்பர் 24 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
முன்னதாக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த இந்திரஜித் குமார சுவாமி பதவி விலகியதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் லக்ஷ்மன் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மத்திய வங்கி ஆளுநரான முன்னாள் ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தியை தான் மறுக்கவில்லை என்றும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார்.
இதேவேளை நாடு பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதையடுத்து, மத்திய வங்கியின் ஆளுநர்’ பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.