நுவரெலியா, டன்சினன் பகுதியில் காட்டுக்கு விறகு தேடிச் சென்றிருந்த போது காணாமல் போயிருந்த 26 வயதுடைய யுவதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவத்த கீழ் பிரிவை சேர்ந்த அந்த யுவதி 5 நாட்களுக்கு முன்னர் தனது தாயுடன் விறகு தேடி காட்டுக்குச் சென்றுள்ளார்.
அதன்போது குறித்த யுவதி காணாமல் போயிருந்த நிலையில், நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள், பொலிஸார் மற்றும் டன்சினன் தோட்ட மக்கள் இணைந்து யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அந்த யுவதி நுவரெலியா கிகிலியாமான காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாந்திபுர பிரதேச மக்கள் கிகிலியாமான காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவர், காட்டில் கூக்குரல் எழுப்பியவாறு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 5 நாட்கள் காட்டில் தனியாக பசியுடன் அலைந்த யுவதிக்கு பிரதேச மக்கள் உணவு வழங்கிய பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை தாயுடன் விறகு தேடிச் சென்றிருந்தபோது, வழி தவறி பல பாதைகளில் அங்கும் இங்கும் அலைந்து வீடு திரும்ப முடியாமல் தவித்ததாகவும், இரவு வேளைகளில் அச்சம் காரணமாக எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்ததாகவும் அந்த யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.