கொவிட் நிலைமைய எவ்வாறு இருந்தாலும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைய, இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து தேசிய பாதுகாப்பிற்கு சகல சந்தர்பங்களிலும் முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது.
இதில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ண ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பன மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பெருமளவிலான போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், திட்டமிட்ட குற்றச் செயல்கள், பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இணைந்து பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரையான ஒருவருடம் ஒன்பது மாதம் காலப்பகுதிக்குள் 3200 கிலோ ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் கொவிட் நிலைமைய எவ்வாறு இருந்த போதிலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அவர் உறுதியளித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் இருந்தவாறே கணிசமான குற்றச் செயல்கள் முன்னெடுக்கப்படுவதை கண்டறிந்துள்ளதாகவும், இதன்படி சிறைச்சாலையின் பாதுகாப்பு முறைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதன் பலனாக தற்பொழுது குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டுக்குள் போதைப்பொருள் நுழையும் அனைத்து வழிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன்படி அதனைத் தடுக்க தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.