தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐநா அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐநாவில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது என்று சுமந்திரன் அதன்போது தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்றும், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும் விசாரிக்க கோரி சம்பந்தனால் ஒரு ஆவணம் அனுப்பப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என்றும் கூறியுள்ளார்.