January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய

ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார்.

ஐநா பொதுச் சபையின் 76 ஆவது அமர்வு நியூயோர்க்கில் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதில் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் உயர்மட்ட அமர்வு செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில், பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

தன்னுடைய தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, குறைந்தளவு தொகையினருடன் இந்த விஜயத்தை மேற்கொள்ள, ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இதன்போது ஜனாதிபதியின் பாரியார், அயோமா ராஜபக்‌ஷவும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுன்னதுடன், அவர் தனது சொந்தச் செலவில் இந்த பயணத்தில் கலந்துகொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.