July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இறக்குமதி கட்டுப்பாடு அத்தியாவசியத் துறைகளை பாதிக்கும்”

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளால் இலங்கையில் அத்தியாவசியத் துறைகள் சிலவற்றுக்கு கடும் பாதிப்பு ஏற்படலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக போக்குவரத்துத் துறை பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களுக்கு 100 சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு இவ்வாறு 100 சதவீத உத்தரவாத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கம் இழக்கச்செய்வதன் மூலம் செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு வீட்டு மின் உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆடைகள், பழ வகைகள் மற்றும் வாகன டயர் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன.

இந்தக் கட்டுப்பாடு குறிப்பிட்ட பொருட்களின் விலைகளில் தாக்கத்தை செலுத்தும் என்பதுடன், அந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வாளர்கள், இதில் டயர் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டால் ஆட்டோ, வான், பஸ் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சந்தையில் டயர் விலை அதிகரித்துள்ள பின்னணியில், எதிர்காலத்தில் அதன் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறாக போக்குவரத்துத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் போது, தானாகவே மற்றைய அத்தியாவசிய துறைகளும் பாதிப்படையும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் குளிரூட்டிகளின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டால், வைத்தியசாலைகள், மருந்து களஞ்சியசாலைகள் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பிரிவுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.