July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வீதிகளை விரிவுபடுத்தும் திட்டங்கள்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மேல் மாகாணத்திலுள்ள தேசிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கம்பஹா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு தான் அறிவுறுத்தியதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கம்பஹா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன 15 வீதிகளை விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்வதற்காக அடையாளம் கண்டுள்ளதாகவும், அந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

அதன்படி, கம்பஹா-மிரிஸ்வத்த வீதி நான்கு வழிப் பாதைகளாகவும், கம்பஹா-யக்கல வீதி நான்கு வழிப் பாதைகளாகவும்,ஏகல – கொட்டதெனியாவ வீதி விரிவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்தல், நிட்டம்புவ -வெயங்கொட வீதி நான்கு வழிப் பாதைகளாக விரிவுபடுத்தல்,வெயங்கொட – கல் எலிய வீதியை விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்தல்,கலகெடிஹேன -வெயங்கொட வீதி விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தி செய்தல், நீர்கொழும்பு – கிரிஉல்லா வீதியை வை சந்தி வரை நான்கு வழிப் பாதையாக விரிவாக்குதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்,நிட்டம்புவ – ஊரபொல வீதியை காபட் இட்டு அபிவிருத்தி செய்தல்,வரகாபொல நகர குறுக்கு வீதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல், பஸ்யாலையில் இருந்து மீரிகம வழியாக கிரியுல்லவிற்கான வீதியை விரிவுபடுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்,ஜா -எல மினுவாங்கொட,திவுலப்பிட்டிய வீதியை அபிவிருத்தி செய்தல்,நீர்கொழும்பு- கிரியுல்ல வீதியை அபிவிருத்தி செய்தல்,ஊரபொல -ஹங்வெல்ல வீதி அபிவிருத்தி மற்றும் பஸ்யால சந்தியை விரிவுபடுத்துதல் என்பன இதன் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தின் கடவத்தையிலிருந்து மீரிகம வரையான பகுதி கம்பஹா நகரத்தின் ஊடாக செல்வதால் அதன் நிர்மாணப் பணிகள் கம்பஹா நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தாக்கம் ஏற்படுத்தலாம் என்று தெரிவித்த அமைச்சர்,கம்பஹா நகரத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கும் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளதாக மேலும் கூறினார்.