கொவிட் வைரஸ் பரவலில் பாதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுவரையில் ஐயாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் மகப்பேற்று மற்றும் சிறுவர் நல பணிப்பாளர் வைத்தியர் சித்திரமாளி டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் வருடாந்தம் மூன்று இலட்சத்து பத்தாயிரத்துக்கு அண்ணளவானோர் குழந்தை பிரசவிக்கின்றனர். எனினும் தற்போது கொவிட் வைரஸ் பரவலை அடுத்து நாட்டில் இதுவரையில் ஐயாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார் பாதிக்கப்படுகின்றனர்.இது சாதாரண எண்ணிக்கை அல்ல.
வைத்தியசாலைகளில் அனுமதித்து வைத்திய சிகிச்சைகளை வழங்க முடியாத நெருக்கடி நிலையில் வீடுகளில் இருந்தே கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலைமை தொடருமானால் சமூகத்திலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.ஆகவே வைரஸ் பரவலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.