இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டாலும் அதனை தாண்டிய வீரியத்துடன் டெல்டா வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மை காணப்படுவதாகவும், தடுப்பூசிக்கு கட்டுப்படாத உச்சகட்ட டெல்டா வைரஸ் பரவல் நிலையொன்று ஏற்படலாம் எனவும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டாலும் முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.
உலகில் தற்போது பரவிக் கொண்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்றில் மோசமானதும், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமானது டெல்டா வைரஸ் தொற்றாகும்.அமெரிக்கா,இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக மரணங்கள் ஏற்படவும், தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கவும் டெல்டா வைரஸ் பரவலே காரணமாகும்.
இது அறிக்கையில் ஆரம்ப ஆய்வுகளில் வெளிப்பட்டது.தற்போது வேறுபட்ட சில வைரஸ்கள் குறித்து பேசினாலும் கூட டெல்டா வைரஸ் பரவலின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. இலங்கையிலும் அதே நிலைமையே காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி ஏற்றாதவர்களிடம் இருந்து டெல்டா வைரஸ் வேகமாக பரவுகின்ற காரணத்தினால் வைரஸ் திரிபுபட அதிக வாய்ப்புகள் உள்ளது.இது புதிய வைரஸ் ஒன்றினை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.குறைந்த அளவிலான பொது மக்கள் தடுப்பூசி ஏற்றாது நிராகரித்தாலும் கூட அது முழு நாட்டையும் பாதிக்கும் என்பதையும் அவர் தெரிவித்தார்