இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 8 ஆம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,864 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் 2856 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 477,636 ஆக உயர்வடைந்துள்ளது.
எவ்வாறாயினும் கடந்த சில தினங்களாக நாட்டில் நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டதுடன், இருநூறுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியிருந்தன.
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக தொற்றுப் பரவல் குறைவடைந்துள்ளதாக கூற முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.