யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் தயாராக இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக மேற்கொண்ட பயணத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டின் எந்த ஒரு இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றால், அதுதொடர்பாக உரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதன் மூலம், குறித்த வன்முறைச் சம்பவங்களோடு தொடர்பானவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை அரசாங்கத்தினால் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பாராமல் அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“குறிப்பாக வடக்கு- கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதற்காக பல மில்லியன் ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அதேபோன்று, பல்வேறு குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அசாங்கம் வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரிவினை பார்ப்பதில்லை”
என்று நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் பதிலளித்துள்ளார்.