July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வட-கிழக்கு இணைப்பை பற்றி பேசியவர்கள் இன்று நான்கு பிரிவுகளாக பிரிந்து நிற்கிறார்கள்’

வடக்கு-கிழக்கு இணைப்பை பற்றி மேடைகளில் பேசியவர்கள் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு 4 பிரிவாக பிரிந்து கடிதம் அனுப்பியுள்ளனர். இவ்வாறு பல கூறுகளாக பிரிந்து இருப்பவர்கள் தான் மட்டக்களப்பிற்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் மட்டு. மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் லங்கா சதொச மொத்த விற்பனை நிலையத்தை இன்று வியாழக்கிழமை (9) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமத்திரன் ஐரோப்பிய யூனியனையும் அமெரிக்காவையும் திருப்திப்படுத்தவும் அதற்கு போட்டியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், முன்னாள் வடமாகான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மற்றும் சிவில் அமைப்புக்கள் என பல கூறுகளாக பிரிந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் அனுப்புகின்றனர்.

இவ்வாறு பல கூறுகளாக பிரிந்து இருப்பவர்கள் மட்டக்களப்பிற்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள்.ஆகையால் யார் முதலில் ஒன்றுபடவேண்டும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை மூடை நெல் இருக்கின்றது,எத்தனை மூடை அரிசி இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திருக்கின்றது.திட்டமிட்ட சதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசியை 120 ரூபாவுக்கு விற்பது என்பது ஒரு அடாத்தான விடயமாகவே பார்க்கின்றோம்.

அதேவேளை, மட்டக்களப்பில் டெல்டா வேரியன் 88 வீதம் அதிகரித்துள்ளது.எனவே பொதுமக்கள், இளைஞர்கள் பொது இடங்களில் கூடுவது, வர்த்தக நிலையங்களில் கூடுவது மற்றும் அநாவசியமாக வீதிகளில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியேறாது சுகாதார துறையினரின் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.