பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளின் வியாபாரிகள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு சவால் விடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி களஞ்சியசாலைகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிட்டத்தட்ட 1,000 மெற்றிக் டொன் அரிசி கைப்பற்றப்பட்டது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல தலைமையிலான குழுவினர் நேரடியாக அப்பகுதிக்கு விஜயம் செய்து இந்த ஆய்வினை நடத்தியிருந்ததுடன், கைப்பற்றப்பட்ட அரிசிகளை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (09)காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில்,
பொலன்னறுவையில் உள்ள பிரபல்யமான ஒரு சில அரிசி வியாபாரிகள் இலங்கைக்கு தேவையான அரிசியில் 16 வீதத்தை மாத்திரம் தான் வழங்குகின்றனர்.அதில் பெரும்பாலானவை சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளாக உள்ளது. எனவே, எஞ்சியுள்ள 84 வீத அரிசியை விநியோகிக்க அரசாங்கம் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.
கடந்த சில நாட்களாக அரிசியை விநியோகிப்பதில் சிக்கல் இருந்தாலும், சதொசவுக்கு அரிசி கிடைத்த பிறகு தற்போது நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என தெரிவித்த அவர், பெரிய அளவிலான அரிசி வியாபாரிகள் பொது மக்களை மிரட்டுகின்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
எனவே, அரிசி ஆலைகளின் வியாபாரிகள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு சவால் விடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.