இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர், சென் பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டுவரும் குளம், ஐ திட்ட வீதி, ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம், யாழ். மாநகர சபை புதிய கட்டடம் என்பவற்றைப் பார்வையிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் கண்காணிப்பதே, இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
இதன்போது, யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் எம். பியுமான அங்கஜன் இராமநாதன், எம்.பி. சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம், யாழ். மாநகர மேயர் மணிவண்ணன், யாழ்ப்பாண பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கண்காணிப்புப் பயணத்தில், பாசையூரில் நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம், பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பளை அருணோதயா பாடசாலைக் கட்டடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி திட்டங்கள், நாவற்குழியில் யாழ்ப்பாண- கிளிநொச்சி நீர் விநியோக திட்டத்தையும் போன்றவற்றையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார்.