20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த வயது பிரிவினருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்துவது பொருத்தமானது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த கருத்து தெரிவிக்கையில்,
20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்த முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி போதுமான கையிருப்பில் இருப்பதால், பைசர் தடுப்பூசியை அவர்களுக்கு செலுத்துவதற்குப் பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டது.
எனவே, பைசர் தடுப்பூசிக்கு பதிலாக சினோபார்ம் தடுப்பூசியை 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்தும்படி நாங்கள் பரிந்துரை செய்தோம். இது தொடர்பில் சுகாதார அமைச்சர் எமக்கு சாதகமான பதிலை அளித்தார்.
அத்துடன், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பான பொருத்தமான பரிந்துரைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 12 – 18 வயதான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி சிறந்தது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பால் சிறுவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற காரணத்தால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பரிந்துரைக்கிறது.
எனவே, அவற்றை 12-18 வயதான மாணவர்களுக்கு செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.