July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தீவிரவாத சக்திகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கவும்’: ஞானசார தேரர் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டில் உள்ள தீவிரவாத சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்தி, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறாமல் இருக்க புலனாய்வுத் துறை பலப்படுத்தப்பட வேண்டும் என்று பொதுபல சேனா கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புலனாய்வுப் பிரிவை செயலிழக்கச் செய்ததன் காரணமாகவே சஹரான் உட்பட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க பல்வேறு சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக கடிதத்தில் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனாவுடன் நெருங்கிச் செயற்படுவதால் சீனாவின் சர்வதேச எதிரிகள் இலங்கையை இலக்கு வைப்பதாகவும், நாட்டில் செயற்படும் சர்வதேச புலனாய்வுத் துறை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை அழித்ததைப் போன்று இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்க வேண்டும் என்று தேரர் தெரிவித்துள்ளார்.

மதத் தலைவர்களைப் பயன்படுத்தி ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை வைத்துக்கொண்டு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளையும் தூண்ட முயற்சிப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.