இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
46/1 தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது, எனவே பொறுப்புக்கூறல் விடயத்தை மனித உரிமைகள் பேரவையில் வைத்துக்கொண்டிருக்கும் வரையில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியும் அரசியல் தீர்வும் தாமதித்துக்கொண்டே இருக்கும் என அந்தக் கடிதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
இதனால் இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தம்மால் அனுப்பிய கடிதங்களும் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கடிதம் ஒன்றும், ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து எழுதிய மற்றுமொரு கடிதமும் ஏற்கனவே அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.