வைத்திய கட்டமைப்பில் பாரிய நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது.அதனை சரிசெய்ய வேண்டும். ஆகவே தடுப்பூசிகளை விரைகாக ஏற்றிக் கொண்டு வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என சமூக மருத்துவத்துறை நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
கொவிட் மரணங்களை குறைக்க வேண்டும்,கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும், அதன் மூலமாக நாட்டின் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிட்ட அவர்,
குறிப்பாக கொவிட் மரணங்களை தடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும்.அதற்கான ஆலோசனைகளை நாம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம். இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது பிரதானிகளின் கடமையாகும் எனக் குறிப்பிட்டார்.
நாடு திறக்கப்பட வேண்டும்.ஆனால் அதற்கு முன்னர் முக்கிய தீர்மானங்களை முன்னெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.இதனை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் அரசாங்கத்திற்கும், கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கும் முன்வைத்துள்ளனர்.அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே நாமும் கூறுகின்றோம்.கொவிட் வைரஸ் நோயாளர்களுக்கு சமாந்தரமான ஏனைய தொற்று, தொற்றா நோயாளர்களின் எண்ணிக்கையும் உள்ளது. அவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.