October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பாராளுமன்ற,மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுவான தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்த வேண்டும்’

பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுவான தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதன் கீழ் பிரதிநிதிகளின் தெரிவு 65 வீதம் தொகுதி வாரி முறையிலும் 25 வீதம் விகிதாசார முறையிலும் அமைய வேண்டும் எனவும் பாராளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க கலந்து கொண்டிருந்தார்.

பாராளுமன்றமானது இலங்கையின் பல்வேறு தேர்தல் தொகுதிகளை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக அமைய வேண்டும்,தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனவும் கட்சியின் நிலைப்பாட்டை முன்வைத்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 25 வீதம் பெண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.அதேபோல் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் அல்லது வேறு நாட்டில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட, தொடர்புகளை கொண்டுள்ள நபர்கள் இலங்கையில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது வரையறுக்கப்படவேண்டும் அல்லது தடுக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை அவர் முன்வைத்துள்ளார்.