பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 1,000 மெற்றிக் டொன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல தலைமையிலான குழுவினர் நேரடியாக அப்பகுதிக்கு விஜயம் செய்து இந்த ஆய்வினை நடத்தியிருந்ததுடன், கைப்பற்றப்பட்ட அரிசிகளை அரசுடமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட விலையில் அரிசி சந்தைக்கு வழங்கப்படாததால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இதன்படி, நிபுண, லத்பந்துர, அரலிய, ஹிரு, நிவ் ரத்ன மற்றும் சூரிய போன்ற அரிசி ஆலைகளில் காணப்பட்ட தொகைகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, நிவ் ரத்ன அரிசி ஆலையிலிருந்த அரிசித் தொகையைக் கையகப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, அதன் உரிமையாளரால், திட்டமிடப்பட்ட வகையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதிகாரிகளின் பணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியிருந்ததாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சதொச மற்றும் உணவுத் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 70 லொறிகள் பொலன்னறுவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கைப்பற்றப்பட்ட அரிசி கையிருப்பு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அவற்றை சதொச மூலம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவ மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி, பொலன்னறுவ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒஷான் ஹேவாவிதாரன உள்ளிட்ட பலரும், இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.