November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அரசாங்கம் வேட்டையாடப் போகிறதா’? எதிர்க்கட்சி கேள்வி

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அரசாங்கம் வேட்டையாடப் போகிறதா? என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சகல அதிபர் மற்றும் ஆசியர்கள் தொடர்பான விரிவான அறிக்கைகளை அவசர கால சட்ட வாக்கெடுப்புக்கு முன்னரே பொலிஸார் திரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்கள் விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கல்வி அமைச்சர் மற்றும் பொலிஸார் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கம் நாட்டு மக்களை ஒடுக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி தெரிவித்துள்ளார்.

“நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தின் திட்டம் என்ன?

ஆசிரியர்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, ஆசிரியர்களுக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, ஆசிரியர்களைக் கவனிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.