மட்டக்களப்பிலிருந்து மாலைதீவுக்கு மணல் கடத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகத் தயாராக இருப்பதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் தீவொன்றை நிரப்புவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவரினால் கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் திரட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு அவர் இந்த சவாலினை விடுத்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் மற்றும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற முறையில் நான் எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன்.
நாட்டின் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கமைய நாட்டின் வளங்களை சட்டவிரோதமாக விற்கவோ அல்லது கடத்துவதற்கோ முடியாது.
உண்மையில் ஒரு தீவை உருவாக்க வேண்டுமானால் அதற்கு எவ்வளவு மணல் தேவை என்பதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
அப்படியானால், கப்பல்கள் மூலமே நாட்டிற்கு வெளியே மணலை கொண்டு செல்ல முடியும். எனவே சட்டவிரோதமாக அவ்வாறான விடயங்களை செய்ய முடியாது.
குறிப்பாக, நமது கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமானால், அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அண்மையில் மாலைதீவுக்கு ஆறரை க்யூப் மணல் அனுப்பி வைக்கப்பட்டது. இது மாலைதீவில் பயன்படுத்தப்படும் நீர் வடிகட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது நமது நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தால் அனுப்பப்பட்டது மற்றும் அதற்காக அனைத்து வரிகளும் வசூலிக்கப்பட்டுள்ளன.அது இல்லாமல் ஒரு தீவை நிரப்ப முடியாது.
மணல் மண் மற்றும் கல் கடத்தலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் உள்ளனர். அவர் கூறுகின்ற அரசியல்வாதிகளும் இவ்வாறான மோசடிக்காரர்களின் பின்னால் செல்வதை நான் அறிவேன்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எப்போதும் ஊடகங்களில் முகத்தை காண்பிக்க முயற்சிப்பவர். எனவே, அவர் தைரியமானவர் என்றால், அதைப் பற்றிய தகவல் இருந்தால், அவர் அதை முன்வைக்கலாம்.
எனவே, மாலைதீவில் உள்ள ஒரு தீவை நிரப்ப நம் நாட்டிற்கு மணல் அனுப்பப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டால், நான் அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்ல, நாளை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.