July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்தம் நிறைவேறியது

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ்வேளையில், தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சபாநாயகர் தவிர்ந்த 222 எம்.பிக்களில் ஆதரவாக 156 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்துள்ளதுடன், ஒருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதன்போது ஆளுங்கட்சியின் 148 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியின் 8 உறுப்பினர்களும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் டயனா கமகே ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர் அரவிந்தகுமார், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பைஷல் காசீம், நசீர் அஹமட், எஸ்.தௌபீக், மொஹமட் ஹாரிஸ் மற்றும் முஸ்லிம் கூட்டணி உறுப்பினர் அலிசப்ரி இப்ராகிம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஆளுங்கட்சி உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், 20 ஆவது திருத்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த விஜயதாச ராஜபக்‌ஷ திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.