நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த வார காலப்பகுதியில் மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக டெய்லி மிரருக்கு நேற்று (07) உறுதிப்படுத்தினார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘மத்திய வங்கியின் ஆளுநர்’ பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமது இராஜினாமாவிற்கு முன்பு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள, பொருளாதார மற்றும் தொழில்துறை பிரச்சினைகளை தீர்க்க தமக்கு முழுமையான வாய்ப்பு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் சிறந்த ஜிடிபி வளர்ச்சியை அடைந்திருந்ததோடு, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அதிகபட்சமாக 8.4% மற்றும் 9.1% என்ற ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்திருந்தது.