July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தி ஒரு நாட்டிற்குள் வாழ வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் நிராகரிக்கவில்லை: சுமந்திரன்

இந்த நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை போன்று பாரதூரமான எந்தவொரு பிரச்சினையும் இல்லை, தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு அரசியல் அமைப்பின் மூலமாகவே தீர்வுகாண முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 20 ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

20வது திருத்தத்தை ஆதரிப்பதல்ல மக்களின் ஆணை,அதனை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்ற ஒரு நாளில் 18 ஆம் திருத்த சட்டம் குறித்து பேசியதைப்போன்று மீண்டும் ஒருமுறை பேசும் நிலை உருவாக்கியுள்ளமை, ஒரே விடயம் மீண்டும் நடப்பது போன்றுள்ளது என்றார்.

அதேபோன்று, 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19வது திருத்தம் கொண்டுவந்த போது, முழு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்ததும் நினைவிற்கு வருகின்றது.

பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட 20 திருத்தங்களில் வெறுமனே, இரண்டு திருத்தங்கள் மாத்திரமே இந்த சபையின் 200ற்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த நாட்டு மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றனர், அதுவே தமிழ் மக்களின் ஆணையாகவும் இருந்தது.இந்த நாடு ஒரு ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்பதன் பிரதிபலிப்பே அதுவாகும்.

ஜனநாயகமே சரியான பாதையாகும். ஜனநாயகத்தை உருவாக்க காலம் எடுக்கும், பேச்சுவார்த்தை அதிகளவில் இடம்பெறும், நிதியும் அதிகளவில் விரயமாகும். ஆனால் அதுவே ஜனநாயகத்தையும் பலப்படுத்தும், அதேபோல் மக்களின் விருப்பம் எதுவோ அதுவே இறுதி தீர்மானமாக இடம்பெறும்.

19வது திருத்தத்தில் பிரச்சினைகள் உள்ளது, அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் 19வது திருத்தமே நிறைவேற்று அதிகாரத்தை கட்டுபடுத்தும் முதலாம் படியாக அமைந்தது. 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவோம் என்ற மக்கள் ஆணை பல சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டன. புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கி, அதில் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டிலும், அதே வாக்குறுதியில்தான் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியானார். ஆயினும், 19வது திருத்தமே நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்தும் ஆரம்ப வேலைத்திட்டமாக இருந்தது.

மேலும் 2015 ஆம் ஆண்டின் பின்னர் முழு பாராளுமன்றமும் அரசியல் அமைப்பு சபையாக மாற்றப்பட்டது. இதன்போது சகலரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது என்ற பொது இணக்கமும் எட்டப்பட்டது.

இந்த நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் போன்ற பாரதூரமான அளவிற்கு, எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

யுத்தத்தை எதிர்கொண்ட பிரச்சினைகள் போன்று வேறு எந்தவொரு பிரச்சினையையும் இந்த நாடு சந்திக்கவில்லை.

ஆகவே தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைக்கு, உறுதியான தீர்வு ஒன்றினை வழங்கியே ஆகவேண்டும். அதேபோன்று, இந்த பிரச்சினை அரசியல் அமைப்பின் மூலமாகவே தீர்க்க முடியும். இதனையே சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அரசியல் அமைப்பே உயரியது என்பதை நாம் நிராகரிக்கவில்லை. அதேபோன்று சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில், சகலரும் ஒரு நாட்டில் வாழக்கூடிய விதத்தில் அமைய வேண்டும்.

ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தி ஒரு நாட்டிற்குள் வாழ வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் நிராகரிக்கவில்லை.

பெரும்பான்மையினரின் நிலைப்பாட்டை ஏற்றுகொள்ள வேண்டும். அதற்கு நாமும் இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ளோம் என்றார்.