கொழும்பு நகரில் தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களாக கொழும்பு நகரில் நாளாந்தம் 100 முதல் 140 வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அதேபோன்று நாளொன்றில் இங்கு பதிவாகிய 15 வரையான மரண எண்ணிக்கையிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி வேலைத்திட்டத்தின் வெற்றியாகவே இதனை பார்ப்பதாகவும் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 86 வீதம் வரையிலானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை முழுவதும் நேற்றைய தினத்தில் 2960 கொவிட் தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி நான்கு வாரங்களின் பின்னர் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை மூவாயிரத்தை விடவும் குறைவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.