அன்று தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை இப்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
எந்தத் தேவையும் இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சிங்கள-பௌத்த பேரினவாத காலனித்துவ ஆதிக்க ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலும்,ஆயுத ரீதியிலும் போராடும் போது அதனை ஒடுக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 30 ஆண்டுகளாக தமிழர்களை வேட்டையாடியது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் குளத்திற்கு கீழ் 178 ஏக்கரில் விவசாய காணி 72 ஆம் ஆண்டு முதல் உறுதிகள் வழங்கப்பட்டு விவசாயிகளினால் விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த விவசாய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பௌத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கும் முல்லைத்தீவு வன இலாகாவுக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
அதேபோன்று மயிலத்தமடுவில் இந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிங்கள மக்கள் வெளியேறுவார்கள் என்று அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது.ஆனால் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.ஆனால் அங்கு மக்களின் மாடு வளர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் அந்தக் காரியத்தை செய்கின்றனர்.ஆகவே அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.