July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்த ஆண்டில் 1500-1600 பில்லியன் ரூபா குறைவாகவே வருமானம் கிடைத்துள்ளது’

கடந்த நீண்டகால பொருளாதார வேலைத் திட்டங்கள் மற்றும் கொவிட் நிலைமைகள் காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் நாம் எதிர்பார்த்ததை விடவும் 1500-1600 பில்லியன் ரூபா குறைவான வருமானமே கிடைத்துள்ளது.ஆனால் நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக அரசாங்கத்தினால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.எனவே எதிர்க்கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

கொவிட் தொற்று பரவலினால் ஏற்பட்ட நெருக்கடிகள் மட்டுமல்ல கடந்த காலங்களில் கையாளப்பட்ட பொருளாதார செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட விளைவே இன்றைய நெருக்கடிக்கு காரணம். நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்து சென்றுள்ளது.ஒரு இரு வருடங்களில் இருந்தல்ல,இரு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு கிடைக்கும் வருமானம்,அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்பனவற்றை நாட்டின் செலவுடன் ஒப்பிடுகையில் நாட்டின் வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது.ஒரு சில நேரங்களில் அனாவசிய செலவுகள், வீண் விரயம், ஊழல் என்பனவும் உள்ளதென்பது எமக்கு தெரியும்.நீண்ட காலமாக இவை இடம்பெற்றவை என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.எனவே உண்மையாக இந்த செலவுகளை குறைக்க முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம் என அவர் கூறினார்.

மேலும் கொவிட் நிலைமைகள் காரணமாக எமக்கு கிடைக்கவிருந்த வருமானமும் கிடைக்காது போயுள்ளது.கொவிட் நிலைமைகள் காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் நாம் எதிர்பார்த்ததை விடவும் 1500-1600 பில்லியன் ரூபா குறைவாகவே கிடைத்துள்ளது. குறிப்பாக நிதி அமைச்சின் கீழுள்ள மூன்று பிரதான நிறுவனங்கள் மூலமாக எமக்கு வருமானம் கிடைக்கின்றது.அதில் ஒன்றே சுங்கம், சுங்க திணைக்களத்தின் மூலமாக வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்கள் மூலமாக குறிப்பாக வாகனங்கள் இறக்குமதியில் அதிக வருமானம் கிடைத்தது.ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.