
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடக்கின்றன.எனவே உடனடியாக எரிவாயு மின்தகன மேடைகளை வடக்கு, கிழக்கில் அமைக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள்,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய எரிப்பதற்கு அவசியமான எரிவாயு மின்தகன மேடைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதியளவு இல்லை.இதனால் வடக்கு, கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன.
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே எரிவாயு மின்தகன மேடைகள் உள்ளன.மட்டக்களப்பில் இல்லை.எனவே நிதி அமைச்சர் அவசரமாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு தற்காலிகமாகவேனும் எரிவாயு மின்தகன மேடைகளை வடக்கு,கிழக்கில் அமைத்து கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.