முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிதி சட்டமூல வாக்கெடுப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை பஸில் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்று கூறுவதில் தவறில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
20 ஆம் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் நடைபெற்ற எந்தவொரு வாக்களிப்பிலும் கலந்துகொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும், கட்சித் தலைவருக்கு எதிராக வாக்களித்துள்ளதாகவும் இம்ரான் எம்.பி. தெரிவித்துள்ளார்.
‘நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இச்சட்டமூலத்தை சமர்ப்பித்ததால், அவரை எதிர்க்க முடியாமல் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஆகவே, இவர்கள் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமின் கட்டுபாட்டில் இல்லை. முழுமையாக பஸிலில் கட்டுபாட்டிலேயே இருக்கிறார்கள்.
இதனால், இவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பஸில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர்’ என இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.