July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செப்டம்பரில் வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராகும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் இம்மாதம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜனாதிபதி முதலில் இங்கிலாந்து செல்ல உள்ளதுடன், லண்டனில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. லண்டன் உச்சி மாநாட்டிற்குப் பிறகு நேரடியாக அமெரிக்கா செல்லவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் வொஷிங்டனில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஐ.நா.பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அடுத்த வாரம் இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்

இத்தாலி பொலொக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் இத்தாலிக்கு பயணிக்கவுள்ளார். பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் உடன் செல்லவுள்ளார்.

மாநாட்டுக்குப் பின்னர் வத்திக்கானுக்கு செல்லவுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, அங்கு புனித பாப்பரசரை சந்தித்து ஆசி பெறவுள்ளார்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் அங்கு பாப்பரசருக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு வெளிவிவகார அமைச்சர், நேரடியாக அமெரிக்கா சென்று ஐ.நா பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.