July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் விளக்கம்!

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கான முழு அதிகாரமும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி முன்வைத்திருந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி செயலாளரினால் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் ஐந்தாவது சரத்தின் பிரகாரம் ஆணையாளருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி செயலாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

பொலிஸ்மா அதிபர், அனைத்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மற்றும் உணவு ஆணையாளர் உள்ளிட்டோருக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் இந்த பணிப்புரையை அவர் விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே நேற்று பாராளுமன்றத்தில், மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான அதிகாரம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இல்லை என்ற கருத்தை  எதிர்க்கட்சி முன்வைத்திருந்தது.