தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் 20ஆவது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 20 ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “சகோதர முஸ்லிம்களின் காய்கறி நறுக்கும் கத்திகளை கூட பயங்கரவாத ஆயுதங்களாக சித்தரிக்கும் சூழலை ஏற்படுத்திய 19ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையிலும், 20வது திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், இந்த நாட்டில் ஜனாதிபதியின் கரங்களில் நிறைவேற்று அதிகாரம் இருந்த காலப்பகுதியைவிட ஏனைய காலப் பகுதியிலேயே அதிகளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததன.
குறிப்பாக, 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகார குழப்பங்கள் காரணமாக, ஈஸ்டர் தாக்குதலுக்கான சூழல் ஏற்பட்டதுடன், அதன் காரணமாக, சகோதர முஸ்லிம்களின் வாழ்வியலும் பொருளாதாரமும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது.
மேலும், எமது அர்ப்பணத்துடன் கூடிய நியாயமான போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமைக்கு வழிகோலும் 13வது திருத்தச் சட்டமானது, அன்று ஆட்சியில் இருந்த பிரதமர் உள்ளடங்கலான பிரபல தலைவர்களினதும், எதிர்க்கட்சியினதும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அதற்கெதிராக தென்பகுதியின் ஆயுதமேந்திய வன்முறைகளுக்கு மத்தியிலும் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதியின் கரங்களில் அதிகாரங்கள் இருந்தமையினாலேயே சாத்தியமாக்கப்பட்டது.
அதேபோன்று, பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வெட்டுப் புள்ளியானது 12 வீதத்திலிருந்து 5 வீதம் வரையில் குறைக்கப்பட்டதும், சிறுபான்மை கட்சிகளினது பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியின் காரணமாக என்பதே உண்மையாகும்.
தமிழர் வரலாற்றில் மாபெரும் போராட்டங்களில் ஒன்றாக சித்தரிக்கப்படுகின்ற, எதிர்ப்புப் போராட்டத்தினாலும் அகற்றப்படாது போயிருந்த வாகனங்களில் காணப்பட்ட ஸ்ரீ எழுத்து ஒரே இரவில் அகற்றப்பட்டதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆனால் நிறைவேற்று அதிகாரத்தினை வலுவிழக்கச் செய்த 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் எவற்றையும் நிறைவேற்ற முடியவில்லை, 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சாதகமான அல்லது பாதகமான கருத்துக்கள் இருப்பின் அவற்றை முறைப்படி முன்வைப்பது வரவேற்கத்தக்கது.
அத்துடன், ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வலுவடைச் செய்யும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டம் அமைகின்ற போதிலும், சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதன் மூலமே அவற்றை தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்துவார் என எண்ணுகின்றேன்” என்றார்.