July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்களின் அடிப்படை உரிமைகளை அடக்கும் விடயங்கள் எதுவும் அவசரகால சட்டத்தில் இல்லை’

எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது போல் மக்களின் அடிப்படை உரிமைகளை அடக்கும் விடயங்கள் எதுவும் அமுல்படுத்தி இருக்கும் அவசரகால சட்டத்தில் இல்லை.மாறாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைக்காமல் விநியோகிக்கும் நடவடிக்கையே இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

ஜனாதிபதியின் அறிவிப்பின் முதலாவது பகுதியில் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் அவற்றை கைப்பற்றி நியாயமான விலைக்கு விற்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் பாவனையாளர்கள் தான் நன்மை அடைவர்.இதனை பயன்படுத்தி எவ்வாறு வேறு நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

நுகர்வோர் அதிகார சபையின் வாயிலாக இவற்றை செய்ய முடியாதா என கேட்கின்றனர்.ஆனால் உத்தரவாத விலையை நிர்ணயித்து அதிக விலைக்கு விற்றால் வழக்கு தொடர மட்டுமே இதனால் முடியும். ஆனால் நடைமுறையில் இருக்கும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் 18 வீதம் தான் இங்கு உற்பத்தியாகிறது.82 வீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.அதனை வியாபாரிகள் பயன்படுத்தி மக்களை சூறையாடுகின்றனர்.இதனை கட்டுப்படுத்தவே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.