அத்தியாவசிய சேவைகள் என கூறி,ஏதேனுமொரு சேவையை பிரகடனப்படுத்த வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு சட்டமே இருகின்றது.அதன் கீழே பிரகடனப்படுத்தலாம்.ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி ஜனாதிபதி இரவோடு இரவாக தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க நினைக்கின்றார்.
நாட்டை இருட்டுக்குள் வைத்திருக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். நாட்டிலே விலைவாசி கட்டுப்படுத்த வேண்டும் என்பது உண்மை. ஆனால்,இதனை இப்படியாக செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழேயே 17 வது பிரிவிலே இரண்டாம் பாகம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கொண்டு ஜனாதிபதி அவசரகால நிலைமைகளை நடைமுறைப்படுத்தியுள்ளார்.ஆனால் அவசரகால சட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய முறைமை ஒன்று உள்ளது.
பாராளுமன்ற முறைமையின் கீழ் இதனை செய்ய வேண்டும். ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது. இவற்றை கையாள வெவ்வேறு சட்டங்கள் எம்மிடத்தில் உள்ளது. 1971 ஆம் ஆண்டில் இருந்தே அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளது.பல்வேறு சந்தர்ப்பங்களில் அவசரகால நிலைமை கையாளப்பட்டு கைதுகள் இடம்பெற்றன.
யுத்த காலத்தில் கூட அவசரகால சட்டத்தை பயன்படுத்தி துஸ்பிரயோகம் இடம்பெற்றது என்பது எம் அனைவருக்கும் தெரியும்.இப்போதும் உணவு மாபியாவை கையாள அவசரகால சட்டத்தை கொண்டு வருவதாக கூறி ஜனநாயக அடக்கு முறையை கையாள அரசாங்கம் நினைக்கின்றது.இது ஜனநாயக உரிமை.
ஏனைய ஜனநாயக செயற்பாடுகளை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதே எமது குற்றச்சாட்டாகும்.இதனை அரசாங்கத்தில் இருக்கும் எவரேனும் இல்லையென மறுக்க முடியுமா? இதற்காக இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்பதை நாம் கேட்கின்றோம்.
இன்று பாராளுமன்றத்தில் அவசரகால நிலைமைகளை பிரகடனப்படுத்தியதை ஆதரிக்குமாறும் அதற்கு இணங்குமாறும் ஒரு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. உணவு விநியோகம் மற்றும் விலைவாசி அதிகரிப்பு என்பவை தொடர்பில் எம்மிடத்திலும் பாரிய கரிசனை உள்ளது.ஆனால் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தித்தான் இதனை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியை கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும்.
ஏனென்றால்,உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு மற்றும் உணவுப் பொருட்களை பதுக்கிவைப்பது, உணவுப் பொருட்களை மக்களுக்கு விற்காது தடுப்பது அல்லது விற்காமல் மறுப்பது போன்ற விடயங்களை எல்லாம் வேறு சாதாரண சடங்களின் கீழ் செய்ய முடியும்.அதற்கான பிரிவுகளும் உள்ளன.இவற்றை கையாளும் சட்ட திட்டங்களும் நாட்டில் ஏற்கனவே அமுலில் இருக்கின்றன.
அத்தியாவசிய சேவைகள் என கூறி,ஏதேனுமொரு சேவையை பிரகடனப்படுத்த வேண்டும் என்றால் அதற்கெண்டு ஒரு சட்டமே இருகின்றது.அதன் கீழே பிரகடனப்படுத்தலாம்.பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழேயே 17 வது பிரிவிலே பாகம் மூன்றிலே அதற்கான இடம் இருக்கின்றது.
ஆனால் நாட்டை அவசரகால நிலைமையின் கீழ் கொண்டுவரும் உண்மையான நோக்கம் இப்படியான ஒரு அவசரகால நிலையை பிரகடனப்படுத்திவிட்டால் அதன் கீழான அவசரகால சட்ட விதிகளை ஜனாதிபதி இரவோடு இரவாக கொண்டுவர முடியும்.அதனை இந்த பாராளுமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது. இந்த பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை மாதத்திற்கு மாதம் அவசரகால நிலைமை அனுமதிப்பதா,இல்லையா என்ற கேள்வி மட்டும் தான்.தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சொல்லப்பட்டுள்ள விதத்திலே ஒரு கபடமான எண்ணம் இருப்பது தெளிவாக எமக்கு தெரிகின்றது. நாட்டிலே விலைவாசி கட்டுப்படுத்த வேண்டும் என்பது உண்மை.ஆனால் இதனை இப்படியாக செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.