மக்கள் நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் அவசரகால சட்டமல்ல வேறு எந்த சட்டத்தையும் பயன்படுத்தி மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.யுத்தத்திற்கு பயன்படாத வாள் பின்னர் எதற்கு.அதேபோல் மக்களின் நலன்களுக்கு பயன்படாத சட்டம் நடைமுறையில் இருப்பதில் பயனென்ன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களின் நலன்களுக்காக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.இப்போது எதற்கு என்ற கேவிக்கு எம்மிடம் பதில் உள்ளது.நாடு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்த போதிலும் ஒரு சந்தர்ப்பதிலேனும் நாம் உணவு பஞ்சத்திற்கு முகங்கொடுக்கவில்லை.
1970 களில் ஒரு சில நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்த போதிலும் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாட்டில் விவசாயம் கட்டியெழுப்பப்பட்டது.1977 களின் பின்னர் தேசிய விவசாயம் வீழ்ச்சி கண்டு இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.திறந்த பொருளாதாரம் இதற்கு பிரதான காரணமாகும்,
கொவிட் வைரஸ் தாக்கத்தின் பின்னரே இதன் தாக்கம் எமக்கு வெகுவாக விளங்கியது.ஒரு நாளைக்கு நாட்டை முடக்குவதனால் 15 கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றது.வருடாந்த வருமானம் 41 பில்லியன் ரூபாவாகும்.அதில் பதினைந்து பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது என்றால் மிகப்பெரிய தாக்கமாகும்.
அதேபோல் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள், நாளாந்த வருமானத்தை பெற்றுக் கொள்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக பாரிய அளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்குகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.