July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டில் உணவு பஞ்சம் இல்லை, உணவு மாபியாவே இடம்பெறுகின்றது’

இந்த நாட்டில் ஒருபோதும் உணவு தடுப்பாடோ, உணவு பஞ்சமோ ஏற்படவில்லை.மாறாக உணவு மாபியா ஒன்றே இடம்பெற்றுள்ளது. ஆகவே நாட்டில் இடம்பெற்றுக் கொண்டுள்ள உணவு மாபியாவை தடுக்கவே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இது இராணுவ ஆட்சியை உருவாக்கும் நோக்கமல்ல என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் சபையில் தெரிவித்தனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

எமது நெல் உற்பத்தியாளர்களின் நலன் கருதியே எமது அரசாங்கம் உர மானியங்கள்,சலுகைகளை வழங்கி வருகின்றது.சகல நெல் ஆலை உரிமையாளர்களையும் வரவழைத்து நிர்ணய விலையை வலியுறுத்தியுள்ளோம். அதேபோல் சீனி ஊழல் குறித்து பேசினர். ஆனால் இன்று சீனி கொள்ளையர்களை கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 220,230 ரூபாவுக்கு விற்ற சீனியை நிர்ணய விலைக்கு கொண்டு வந்துள்ளோம்.ஒரு சிலர் இந்த நாட்டின் விலையை நிர்ணயிப்பதாக இருந்தால் அரசாங்கம் எதற்கு.இந்த சூழலை மாற்றவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடும் இல்லை.

தற்போது அவசரகால சட்டம் கொண்டு வந்ததன் நோக்கமும் நுகர்வோரை பாக்காக்கவேயாகும்.உணவு மாபியாவை தடுத்து மக்களை பாதுகாக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்க்கட்சியும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இந்த அவசரகால சட்டம் மக்களை அடக்கவோ ஜனநாயகத்தை அடக்கவோ அல்ல. அவ்வாறு அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அடக்குமுறையை கையாள வேண்டும் என்றால் இப்போது அல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடனேயே நாட்டை இராணுவ மயமாக்கியிருப்போம்.

இந்த நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் நிலவுகின்ற காலத்தில் கூட எதிர்கட்சியினர் 847 ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இவற்றின் மூலமாக ஒரு இலட்சத்து ஆறாயிரம் பொதுமக்களை வீதிக்கு இறக்கியுள்ளீர்கள்.இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏதேனும் ஒன்றுக்கேனும் இராணுவம் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா? அடக்குமுறை கையாளப்பட்டுள்ளதா? கண்ணீர்ப்புகை,தண்ணீர் தாக்குதல் இடம்பெற்றதா என்றால் இல்லவே இல்லை.ஆகவே பொய்யான கருத்துக்களை முன் வைத்து மக்களை குழப்பும் வேலையையே எதிர்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. ஆகவே அவசரகால சட்டத்தை நாம் ஒருபோதும் தவறாக கையாள மாட்டோம்.நுகர்வோரை பாதுகாத்து ஊழல் மோசடிகளை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதனை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலமாக தடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சித்த போதும் சட்டமூலமும் மாபியாவாகவே உள்ளது. சட்டத்தின் மூலமாக இதனை கையாள முடியாதுள்ளது. ஆகவேதான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.