November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“20 ஐ எதிர்க்கும் தமிழ் தலைமைகள் 19 இன் மூலம் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன”:அங்கஜன் இராமநாதன்

20ஆவது திருத்தச்சட்டம் ஆபத்தானதென தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்குபவர்கள் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் என குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.


பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.புதிய அரசியலமைப்பொன்று ஒரு வருடத்துக்குள் கொண்டு வரப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், ஐ.தே.கவில் இருந்து ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாது என்பதை அடிப்படையாக கொண்டே ,நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவினால் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது என குறிப்பிட்டார்.

அதேபோன்று 52 நாள் ஆட்சி இழுபறியில் நடந்தவற்றை நாம் பார்த்தோம். ஆனால் மீண்டும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதமராக மகிந்த தெரிவானார்.


20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு ஆபத்து எனக் கூறுகின்றனர். ஆனால் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு மற்றும் அதன் பின்னர் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம், தமிழ் மக்கள் பெற்றுக்கொண்டது என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்க மக்கள் ஆணை வழங்கினார்கள் எனக் கூறப்பட்டாலும் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கான ஆணையை 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மூலம் மக்கள் வழங்கினர்.எனவே கடந்தகால பாடங்களை உணர்ந்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என தெரிவித்தார்.