July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தினசரி கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இலங்கையில் மேலும் 180 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

83 பெண்களும் 97 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 பேர் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் 133 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 40 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2,245 பேர் இன்று (06) இனங் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு இன்று (06) மாலை 5.45 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 65,012ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 68,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 86,509 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 1,136,780 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.