January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் பிரிட்டனின் தீர்மானம் மகிழ்ச்சியளிக்கிறது’: ஜீ.எல். பீரிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் பிரிட்டனின் தீர்மானம் மகிழ்ச்சியளிக்கிறதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் குறித்த தடையை நீக்கும்படி தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தாலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யுத்தம் நிறைவடைந்தாலும் இவ்வாறான அமைப்புகளின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதைப் புரிந்துகொண்டே, பிரிட்டன் தடையை நீடித்துள்ளது.

பிரிட்டனின் தீர்மானம் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக அமையும் என்று இலங்கை நம்புகிறது” என்று ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று முழு மனித இனத்துக்கும் தீவிரவாதம் என்ற விடயம் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு கவலை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர், குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கையின் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.