November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவசர கால விதிமுறைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’: எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டுக்குத் தற்போது அவசர கால நிலை அவசியமில்லை என்றும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியதே அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இன்று வெளியிட்ட விஷேட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அவசரகால நிலை தேவையில்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு பகரமாக 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார ஆணைக்குழு சட்டமும், அதிகார சபையும் அந்த நோக்கத்திற்காக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் நுகர்வோர் விவகார சட்டத்தை நண்பர்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் அத்தகைய ஒரு ஆட்சியை விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொவிட் தொற்றுநோய் ஒரு தேசிய அனர்த்தம் என்பதோடு இவ்வாறான அனர்த்தங்களின் போது 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்பட அதிகாரம் உள்ளது.

அதன் மூலம் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை ஒன்றை ஸ்தாபிக்க முடியும். எனினும் ஜனாதிபதி இன்னும் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை”

என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அவசரகால விதிமுறைகளை கடுமையாக எதிர்ப்பதாகவும் மக்களின் ஜனநாயகத்தின் மீது இத்தகைய தாக்குதலை மேற்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தோற்கடிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.