October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடரும்”: பிரதமர் மகிந்த நம்பிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் பேணி வரும் என்று தான் நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான ஆணைக்குழு நேற்று வெளியிட்ட தீர்ப்பு குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை டுவிட்டர் பதிவொன்றின் மூலம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இலங்கை தோற்கடித்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததாகவும், விடுதலைப் புலிகளின் எச்சங்கள் உலகம் பூராகவும் இருப்பதாகவும், அவை எந்தவொரு நாட்டினதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பட்டியலில் வைத்திருக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானத்தில் தவறிருப்பதாக அந்நாட்டு தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான ஆணைக்குழு நேற்று தீர்ப்பளித்திருந்தது.

குறித்த தீர்ப்பு தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

‘பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான ஆணைக்குழுவின் ஒக்டோபர் 21, 2020 தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஒரு தரப்பினராக இல்லாததால், நேரடி பிரதிநிதித்துவங்களைச் செய்ய முடியாவிட்டாலும், தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய இராஜ்ஜிய அரசுக்கு பொருத்தமான தகவல்களை வழங்குவதன் ஊடாக ஒத்துழைத்துள்ளது.

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட குழுக்களின் தீவிரவாத சிந்தனை மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் போதிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.

எனவே, இந்தத் தீர்ப்பின் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது.’