November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் முச்சக்கர வண்டிகளில் சில அலங்கார உபகரணங்களை பொருத்த அனுமதி!

பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளில் சில அலங்கார உபகரணங்களை பொருத்த  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அதிக வாகன விபத்துகளை கருத்தில் கொண்டு, விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய பாகங்கள் பொருத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான சில சட்ட திருத்தங்களுடன்  ஆகஸ்ட் 14 ஆம் திகதி  2240/37 இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

எனினும் இந்த வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இதற்கமைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அத்தோடு, வழங்கப்பட்ட அனுமதியை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர்களையும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.