பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கான நேரடி விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
முதலாவது விமானம் சேவை 2021 நவம்பர் 1 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக எயார் பஸ் ஏ 330 – 300 வகை விமானத்தை ஈடுபடுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விமானங்கள் வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் மு.ப 12.35 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவுள்ளன.
இரு விமான நிலையங்களுக்கும் இடையேயான பயண நேரம் சுமார் 11 மணிநேரம் 25 நிமிடங்கள் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நவம்பர் 2016 இல் பாரிஸுக்கான தமது விமான சேவைகளை இடை நிறுத்தியது.
எனினும் தொற்று நோய்களின் போது 2020 ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் தற்காலிகமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை இயக்கியிருந்தது.