July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு போகத்திற்கு 50 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டுகின்றனர்”: விவசாய அமைச்சர்

இலங்கையின் முக்கிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, அதிக விலைக்கு அரிசியை விற்று, போகம் ஒன்றுக்கு குறைந்தது 50 பில்லியன் ரூபாய் இலாபத்தை பெற்றுக்கொள்கின்றனர் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமையானது இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்காக அல்ல என்றும் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனையாவதை கட்டுப்படுத்துவதற்காகவே என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நுகர்வோர் பாதுகாப்பு தவிர வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படாது என்பதனை உறுதியாக கூறுவதாகவும் அமைச்சர் மகிந்தனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

“நாட்டிலுள்ள பிரதான அரிசி ஆலைகள் விவசாயியிடமிருந்து ஒரு கிலோ நெல்லை 55 ரூபாய்க்கு வாங்கி, 125 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதில் சம்பா நெல்லை 60 ரூபாய்க்கு வாங்கி 160 ரூபாய்க்கு விற்றுள்ளனர். கீரி சம்பா நெல்லை 60 முதல் 65 ரூபாய்க்கு வாங்கி 225 ரூபாய்க்கு விற்றுள்ளார்கள். இதன்மூலம் அரிசி ஆலையின் உரிமையாளர்கள் ஒரு போகத்திற்கு 50 பில்லியன் ரூபாய் இலாபத்தை சம்பாதிக்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஆலை உரிமையாளர்களுக்கு 2500 ரூபாய் தண்டப் பணமே விதிக்கப்படுகிறது. இதனை ஒரு இலட்சம் முதல் 20 இலட்சம் வரையில் அதிகரிக்கத் தேவையான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.