November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொறுமையின் எல்லையில் வடக்கு கடற்றொழிலாளர்கள்; போராட்டத்தில் குதிக்கவும் தீர்மானம்

Fishery Boats Common Image

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகளினால் ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் பொறுமையின் எல்லையில் தாங்கள் இருப்பதாகவும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் அசமந்த போக்கினைக் கண்டித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதிருந்த நம்பிக்கையினையும் இழந்துள்ளதாக தெரிவித்திருப்பதுடன்,தமது கடல் வளத்தினையும் வாழ்வாதாரத்தினையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் அன்னராசா மற்றும் உப தலைவர் வர்ணகுலசிங்கம் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளினால் எமது தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றன.அண்மைய நாட்களில் மாத்திரம் எமது கடற்றொழிலாளர்களின் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

எமது கடலுக்குள் அத்துமீறி வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகள் எமது கடற்றொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன.இதனால் கடலுக்கு செல்வதற்கே நம்மவர்கள் அஞ்சுகின்றனர்.இதனால் எங்களுடைய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்கின்ற போதிலும் யாராலும் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

எனினும்,தற்போதைய கடற்றொழில் அமைச்சர் எமது பிரதேசத்தினை சேர்ந்தவர்.எமது பிரச்சினைகளை அறிந்தவர் என்ற அடிப்படையில் காத்திரமாக அணுகுவார் என்று நம்பினோம்.

அவரும் எமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.ஆனால் இதுவரை காத்திரமான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. கடற்றொழில் அமைச்சரினால் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் நாம் இழந்து வருகின்றோம்.

அத்துடன், எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மாத்திரமன்றி எமது கடல் வளத்தினையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.இதனால் எமது சந்ததியே ஆழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.இதனை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே, எமது மக்களை அணி திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

அதனடிப்படையில், கட்டம் கட்டமாக மக்கள் போராட்டங்களை விஸ்தரிக்க தீர்மானித்திருக்கின்ற நாங்கள்,முதற்கட்டமாக சமூக இடைவெளிகளை மதித்து கொரோனா சங்கிலிப் போராட்டத்தினையும் நடத்த தீர்மானித்திருப்பதுடன்,அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தினை முடக்குதல் மற்றும் கடலில் இறங்கி கறுப்புக் கொடிப் போராட்டத்தினை நடத்துவது தொடர்பாகவும் தீவிரமாக சிந்தித்து வருகின்றோம்.

கொரோனா காலத்தில் போராட்டங்களில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்ற போதிலும் எமக்கு ஏற்படுத்தப்படுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம்”என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.