July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்குள்; சுகாதார பணிப்பாளர் கூறுகின்றார்

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தலை அடுத்து தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து புதிய டெல்டா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும்,கடந்த 23 நாட்களுக்கு பின்னர் நாட்டில் கொவிட் மரணங்கள் 150 இற்கும் குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கும் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன,நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைய தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களில் நாட்டின் கொவிட் பரவல் நிலை மிக மோசமானதாக வெளிப்பட்டது.அதற்கமைய நாட்டை முடக்கி தனிமைப்படுத்தல் ஊரடங்கை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதற்கமைய கடந்த மூன்று வாரங்களாக பதிவாகிய கொவிட் மரணங்கள் மற்றும்,தொற்றாளர் எண்ணிக்கையானது நாடு திறக்கப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளுக்கு அமைய பெற்றுக் கொள்ளப்பட்டதாகும்.தொற்று நோய் தடுப்பு பிரிவின் தரவுகளுக்கு அமையவே இந்த அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இறுதியாக கிடைக்கப் பெற்றுள்ள தரவுக்கு அமையவே 145 கொவிட் மரணங்கள் மற்றும் நான்காயிரத்திற்கு குறைந்த தொற்றாளர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஆகவே இது நாட்டின் ஆரோக்கியமான நிலைமையையே வெளிப்படுத்துகின்றது.இதற்கு கடந்த இரண்டு வாரகாலமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை மற்றும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் வெற்றியேயாகும் என்றார்.

இந்த செயற்பாடுகள் காரணமாக புதிய கொவிட் தொற்று பரவல் உருவாவது அல்லது, புதிய கொத்தணிகள் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது.ஆகவே அடுத்த சில நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கின்றது.சில வேளையில் 13 ஆம் திகதிக்கு பின்னரும் ஒரு வாரகாலம் ஊரடங்கை நீடிக்கவும் ஆராயப்பட்டுள்ள காரணத்தினால் நாட்டில் கொவிட் வைரஸ் பரவலை வெகுவாக குறைக்க முடியும்.

எனவே எதிர்வரும் சில நாட்களுக்கு மக்கள் தமது ஒத்துழைப்புகளை வழங்கி நிலைமைகளை விளங்கிக் கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட்டால் எம்மால் விரைவில் நாட்டை திறக்க முடியும்.நாடு திறக்கப்பட்ட பின்னரும் கூட மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.